ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்திலேயே சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர், பாதி வழியிலேயே விழுந்தால் எப்படி பரிதாப்ப் படுவோமோ, அப்படி ஒரு பரிதாபம் இப்போது பிருத்வி ஷாவை பார்த்து ஏற்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த டெண்டுல்கராய் வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வீர்ர் பிருத்வி ஷா. இன்னும் சொல்ல வேண்டுமானால் ஜூனியர் டெண்டுல்கர் என்று அவரை செல்லமாகவே கிரிக்கெட் ரசிகர்கள் அழைத்து வந்தனர். மும்பையை சேர்ந்த பிருத்வி ஷா, 3 வயதிலேயே கிரிக்கெட் பேட்டைக் கையில் தூக்கியவர்.
பிருத்வி ஷாவின் அம்மா 4 வயதிலேயே காலமாகி விட, கிரிக்கெட்தான் அவருக்கு அம்மாவின் பிரிவை மறக்கும் மருந்தாக இருந்தது. தினமும் 3 மணிநேரம் ரயிலில் பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சி முகாமுக்கு செல்வது, கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வது என்று இருந்த பிருத்வி ஷா 10 வயதிலேயே 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்தார் 2013-ம் ஆண்டில் மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் பள்ளிக்காக பிரித்வி ஆடினார்.
இத்தொடரில் செயிண்ட் பிரான்சிஸ் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 85 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட 546 ரன்களை அவர் விளாசினார். இந்திய அளவில் ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் எடுத்த மிக அதிகபட்ச ஸ்கோராகும் இது. இந்த ஒரு இன்னிங்ஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகமே அவரை கவனிக்க வைத்தது. மும்பை அணிக்காக பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக 2018-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையைப் பெற்றுத்தந்தார் பிரித்வி ஷா. அத்துடன் இந்த தொடரின்போது பயிற்சியாளர் திராவிட்டால் மேலும் மெருகூட்டப்பட்டார். அதே ஆண்டில் டெல்லி அணி அவரை வாங்கியது. ஐபிஎல்லில் பிருத்வி ஷா ரன்களை குவிக்க, இந்திய அணிக்கும் தேர்வானார்.
எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த காலத்தில் சீரான ஒழுங்கு அவரை விட்டுச் சென்றது. அணியின் பயிற்சி முகாமுக்கு அவர் ஒழுங்காக வரவில்லை. உடற்பயிற்சிகளை ஒழுங்காக செய்யாததால் உடல் எடை அதிகரித்தது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகரித்தது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல்லில் மட்டும் டெல்லி அணிக்காக தொடர்ந்து ஆடினார். இப்படியே இருந்தால் தொடர்ந்து கிரிக்கெட்டில் சாதிப்பது கடினம் என்று சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டே அவரை எச்சரித்தார். ஆனால் புகழின் ஏணியில் இருந்ததால் சச்சின் சொல்லைக் கேட்க மறுத்தார் பிருத்வி ஷா.
சச்சின் மட்டுமல்ல, டெல்லி அணியில் பயிற்சியாளராக இருந்த இருந்த ரிக்கி பாண்டிங், மூத்த முன்னாள் ஆட்டக்காரர் சவுரவ் கங்குலி ஆகியோரின் ஆலோசனைகளையும் அவர் கேட்கவில்லை. இந்த நேரத்தில் பேட்டிங்கும் அவரை கைவிட்டது. உடல் எடை கூடியதால் அவரால் ஒழுங்காக பீல்டிங்கும் செய்ய முடியவில்லை. கடந்த ஐபிஎல்லில் அவர் பேட்டிங்கின் சொதப்ப, 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணி அவரைக் கைவிட்டது. மும்பை அணியும் ரஞ்சி கோப்பைக்கான அணியில் இருந்து அவரைக் கழற்றிவிட்ட்து. இந்த சூழலில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் பிருத்வி ஷாவை யாரும் வாங்கவில்லை.
ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த பிருத்வி ஷாவை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் யாரும் வாங்காதது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
25 வயதே ஆன பிருத்வி ஷா, தன்னை திருத்திக்கொண்டு மீண்டுவர இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் பிரவீன் ஆம்ரே. பிருத்வி ஷா இனியாவது திருந்துவாரா… இல்லை வினோத் காம்ப்ளியைப் போல் சீரழிந்து போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.