2024ஆம் ஆண்டிற்கான உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் டி ஓர் விருதை ஸ்பெயின் வீரர் ரோட்ரி வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்டுதோறும் தலைச்சிறந்த கால்பந்து வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 5 முறைக்கு மேலாக இவ்விருதினை வென்று அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்காக சிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் டி ஓர் விருதுக்கான போட்டியில் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற ரியல் மேட்ரிட் அணி வீரர்கள் வினிசியஸ் ஜுனியர், ஜூடே பெல்லிங்காம் மற்றும் ஐரோப்பிய கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் ரோட்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற விழாவில் ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் ரோட்ரி 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் டி ஓர் விருதை கைப்பற்றினார். ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் தொடர் நாயகனாகவும், பிரீமியர் லீக் தொடரை 4வது முறையாக மான்செஸ்டர் சிட்டி அணி வெல்ல காரணமாக இருந்ததாலும் ரோட்ரிக்கு இந்த கவுரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெண்கள் பிரிவில் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதினை ஸ்பெயின் இளம்வீராங்கனை அய்டானா பான்மேட்டி வென்றார். நடப்பு ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட கோபா டிராபி, பார்சிலோனா இளம் நட்சத்திரம் லாமின் யாமலுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த வீரருக்கான ஜெர்ட் முல்லர் கோப்பை பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே, இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஆகியோர் தட்டிச் சென்றனர்.