வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹ்திஹாசன் மிராஸ் 35 ரன்களும், கேப்டன் ஷாண்டோ 27 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹார்திக் பாண்டியா 39 ரன்களும், கேப்டன் சூர்யகுமார், சஞ்சு சாம்சன் தலா 29 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.