உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர் அணியை சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது உரையை தொடங்கும் பொழுது தமிழகம் என்று உச்சரித்து விட்டு மன்னிக்க வேண்டும், தமிழ்நாட்டின் உடைய இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வணக்கம் என்று குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்த வீட்டிற்கு வந்துள்ள தாம், பிறந்த வீட்டிற்கு மட்டும் அல்ல வளர்ந்த வீட்டிற்கும் அதுவும் வளர்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்கும் வந்திருப்பதாக பேசி இளைஞர் அணியை சுட்டிக்காட்டினார். அப்போது, உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைவதாகவும், தலைவனாக பெருமைப்படுவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

மூன்றரை வருடம் இளைஞரணி நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், மூன்றரை வருடம் இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை என வினவினார். ஆட்சி பொறுப்பில் இருக்கும் காரணத்தால் பல்வேறு பணிகள் இருக்கும் என்ற காரணத்தால் அதனை தவிர்த்து இருப்பார் என தாமே புரிந்து கொண்டதாகவும் ஆனால் இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
ஒரு செங்கலை வைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் செய்த பிரச்சாரங்கள், நீர்நிலைகளை இளைஞர் அணி மூலம் தூர்வாரியது, மாற்றுத்திறனாளிகளை கடல் நீரில் கால் நனைக்க வைத்தது, என உதயநிதி ஆற்றிய பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவை அனைத்துக்கும் மகுடம் வைத்ததை போல 234 தொகுதியிலும் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடத்தி உதயநிதி ஸ்டாலின் சாதனை படைத்திருப்பதாக கூறினார்.
திமுக படிப்படியாக வளர்ந்த கட்சி, ஆனால் இப்போது, உடனே ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்லி தான் கட்சியே தொடங்குகிறது என ஸ்டாலின் கூறினார். திமுக வரலாறு, கட்சியில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளவே பயிற்சி பாசறை நடத்தி வருவதாகவும், வரலாற்றை பெற்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தை பேணி காக்க வேண்டிய பொறுப்பு உதயநிதிக்கு உள்ளது என்றும் நம்பிக்கையுடன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அந்தக் கடமையை இளைஞரணியினர் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு, வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்நாடு என முழங்கினார்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படும் விழாவின் போது, உடல் நிலை சரியில்லாத சூழலில் இருந்த பேரறிஞர் அண்ணா, அப்படிப்பட்ட விழாவில் கலந்து கொள்ளாமல் இந்த உயிர் இருந்து என்ன பயன்? என்று கேட்டதை நினைவு கூர்ந்த ஸ்டாலின், இன்றைக்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவர் புலம்பிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டி, அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
