அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ரவிக்குமாா் எம்.பி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருப்பதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பெட்ரோல், டீசல் விலைகளைப் பாதிக்கும். தற்போது (பிப்ரவரி 28, 2026 அன்று), பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 73 டாலர் என விற்பனையாகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்த விலையில் சுமார் 20% உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் சுமார் 20% எண்ணெய் விநியோகம் செய்யப்படுவதால், போர் தீவிரமடைந்தால் விநியோகத்தில் இடையூறு ஏற்படும்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88% க்கு மேல் இறக்குமதி செய்கிறது. அதில் 40-50% ஈராக், சவுதி அரேபியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகிறது. அந்த எண்ணெய் முழுவதும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே இந்தியாவுக்கு வருகிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120-150 டாலர் வரை உயரலாம். இதனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ₹2.5 லட்சம் கோடி வரை அதிகரிக்கலாம். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து மோடி அரசு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டதால் நிலைமை சிக்கலாகிவிட்டது. எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் பணவீக்கம் உயரும். அதனால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 150-200 ரூபாய் வரை கூட செல்லலாம்.
அது போக்குவரத்து செலவை அதிகரிக்கச் செய்யும். அத்தியாவசியப் பண்டங்களின் விலை கடுமையாக உயரும். பிரதமர் மோடிக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நாளை அவர் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வருகிறார்” என ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளாா்.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
