நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார். இத மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரத்தில் சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பரஸ்பரம் அவதூறு பேசக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அதேவேளையில் இருவரும் பரஸ்பரம் அவதூறு பேசியதற்காக இருவரும் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது
அதனடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது சொல் மற்றும் செயல்களால் விஜயலட்சுமிக்குஏற்பட்ட எந்தவொரு வலி அல்லது காயத்திற்கும் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருவதாகவும், விஜயலட்சுமிக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என உறுதியளிப்பதாகவும், அதேபோல் விஜயலட்சுமியும் தனக்கு உரிய மரியாதை வழங்குவார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் எந்த கரணத்துக்காகவும் விஜலட்சுமியை தொடர்பு கொள்ள மாட்டேன் என்றும் , ஏதேனும் தேவை ஏற்பட்டால் வழக்கறிஞர்கள் வழியாக மட்டுமே தொடர்பு கொள்வேன் என்றும் உறுதியளிப்பதாக கூறியுள்ளார். ஆகையால் தனது மன்னிப்பு பிரமாண பத்திரத்தை ஏற்று தற்போதைய நடவடிக்கைகளை முடித்து வைக்க வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல, நடிகை விஜயலட்சுமி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது தனது கண்ணித்தை மீட்டெடுக்கும் என்பதால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் சீமான் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளேன். அதேவேளையில், சீமான் மற்றும் அவர்களது ஏஜெண்ட்களால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்
எனது குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளது. எனது தாயை இழந்துவிட்டேன், தற்போது தனது சகோதரிக்கு கை, கால் செயலிழந்துள்ளதால் அவரையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. நான் சீமானால் பாதிப்படைந்துள்ளேன் எனவே தனது வாழ்வாதாரத்துக்காக உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.