தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் காலத்தில் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எதையுமே தற்போதைய பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன
நெல் மற்றும் கரும்பு தாங்குவிலை புறக்கணிப்பு: தேர்தல் நேரத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,500 வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் எங்குமே இடம்பெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

உழவர் பாதுகாப்புத் திட்டங்கள் ஏமாற்று வேலை: சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 மற்றும் உழவர் தோழர் திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
திமுக பாணியிலான ‘ஸ்டிக்கர்’ பட்ஜெட் நாடகம்
கடந்த கால திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய தவெக அரசும் 20 துறைகளை ஒன்றாக இணைத்து வெறும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியே வேளாண் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமரிசித்தார். ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களும் தனித்தனியாக மானியக் கோரிக்கைகளும் இருக்கும்போது, இப்படி அமைச்சரவையின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் துறைகளை இணைத்து பட்ஜெட் போடுவதன் நோக்கம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை மூட்டையாக நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கும் அவல நிலை தொடர்வதாகவும், விவசாயிகளுக்குத் தார்ப்பாய் கூட வழங்காமல் இந்த அரசு அலட்சியமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காவிரி விவகாரமும் தமிழகத்தின் தலைகுனிவும்
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்த அவர், கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டாலும், தமிழகத்திற்குரிய மாதாந்திரத் தண்ணீரைப் பெற அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார். மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் கர்நாடகாவிற்குச் செல்ல முற்படும்போது, அங்குள்ள முதலமைச்சர் “ஊருக்குள் வர வேண்டாம்” என்று கூறுவது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக இந்த வேளாண் பட்ஜெட்டிற்கு தான் ‘பூஜ்ஜியத்திற்கும் குறைவான மதிப்பெண்ணையே’ (Minus Zero) வழங்குவதாகத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இது விவசாயிகளுக்கு எதிரான ஏமாற்று நாடகம் என்றார்.
