கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
2006 ஆம் ஆண்டு என்எல்சி நிறுவனத்தால் வாங்கப்பட்ட இந்த நிலங்கள் விவசாயிகளிடமே இருந்தது இதனை தற்போது கையகப்படுத்தி அதில் கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை முதல் மாலை வரை இந்த பணிகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் நடைபெற்றது.
இந்த நிலையில் வயலில் இருந்த பயிர்கள் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பு அடைந்தனர். மேலும் வெளியூர் ஆட்கள் உள்ளே யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் முதல் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது. பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு வரை 15 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கிராமப் பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
தொடர் கல்வீச்சு சம்பவங்களால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. குழந்தைகளுடனும் பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு காவலர்கள் மாற்று ஏற்பாடாக வாகனங்களை ஏற்பாடு செய்து அனுப்பி வருகின்றனர்.