நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஜேக்கப் மகன் அருண்குமார், டக்கர்மார்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் மகன் நிகில்(17) மற்றும் கொக்கங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஆண்ட்ரூஸ் (17) ஆகியோர் பிளஸ் 2 படித்து வந்தனர். இந்நிலையில் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள வடுகூர்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வகுப்பு தோழரின் புதிய இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு அருண்குமார், நிகில், ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
பின்னர் நண்பர்கள் 6 பேர், அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். தண்ணிரில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். தகவலின் பேரில் பேட்டை, சேரன்மகாதேவி பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இறங்கி தேடினர்.
அப்போது, மாணவர்கள் 3 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து போலிசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.