ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 விண்ணப்பங்கள்
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 நாட்களில் 45,430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS – ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பிக்கின்றனர். அதேபோல் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்து வருகின்றனர். ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்கள் 9613 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5208 பேரும், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2745 பேரும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 463 பேரும் என 18,029 ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/school-education-announcement/84494
பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 14,854 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 10,751 பேரும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 659 பேரும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 621 பேரும், சிறப்பாசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் 516 பேரும் என 27,401 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 45,430 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.