அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட கட்சி அணிகளுக்கு சிபிஐ(எம்) அறிவுறுத்தியுள்ளது.


சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தகைசால் தமிழருமான அன்புத் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு புகழஞ்சலியையும் செலுத்துகிறது.
ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு. பாரதியாரின் பாடல்களாலும், திரு.வி.க.வின் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட தோழர் ஆர்.நல்லகண்ணு, தனது 15 வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டவர். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த தோழர் நல்லக்கண்ணு பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறியவர். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராடியது மட்டுமின்றி திருநெல்வேலியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடவும் தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர். நெல்லை சதி வழக்கில் போலீசாரின் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர்.
1972ம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராடி குடிமனைப் பெற்றுத் தந்தவர். தென்மாவட்டங்களில் 1996ம் ஆண்டு நடைபெற்ற சாதிய மோதல்களின்போது அவரது மாமனார் கொல்லப்பட்டார். கொந்தளிப்பான நேரத்தில் கூட எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது என்று அமைதிப்படுத்தியவர். தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது மட்டுமின்றி, தானே நேரடியாக ஆஜராகி வாதாடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தோழர் ஆர்.நல்லக்கண்ணு பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், விவசாயிகள் – தொழிலாளர்களின் நலன்களுக்காகவும், சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களிடம் அளவிற்கரிய அன்பையும், தோழமையும் கொண்டிருந்தவர். அரசியல் பாகுபாடுகளை கடந்து தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட தலைவராக அவர் விளங்கினார்.
கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதைப் பெற்றவர். அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியையும், தன்னுடைய சொந்த பணமான ரூபாய் 5000/-த்தையும் சேர்த்து ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி வழங்கியவர். விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாய தொழிலாளர்களின் போராளியாகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த செயல்வீரர். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்.
தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சிக் கொடிகளை மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்


