Homeசெய்திகள்தமிழ்நாடு60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் பங்கு... அசைக்க முடியாத சக்தி முதல்வர் விஜய் - காங்கிரஸ்...

60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் பங்கு… அசைக்க முடியாத சக்தி முதல்வர் விஜய் – காங்கிரஸ் தீர்மானம்..

-

- Advertisement -

மாணிக்கம் தாகூர் - விஜய்
“60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு; முதலமைச்சர் ஜோசப் விஜய் காமராஜர், எம்ஜிஆர் போல அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார்” என மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (02.07.2026) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் ​ தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இரு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ​அதன் விபரம் வருமாறு:

we-r-hiring

“​தீர்மானம் 1: புதிய தலைவர் ப. மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்தும்… 2029-க்கான சூளுரையும்!

​அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ப.மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

​வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சகாப்தம்:

தமிழகத்தில் கடந்த 1967-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு, திராவிட இயக்கங்களோடு கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலையே நீடித்து வந்தது. ஆனால், 60 ஆண்டுகால தமிழக வரலாற்றில் இல்லாத புதிய மாற்றமாக, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்று, இரண்டு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூழலில் நீங்கள் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளீர்கள்.

​முந்தைய தலைவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலிமைப்படுத்த வேண்டிய மகத்தான பணி உங்களை எதிர்நோக்கியுள்ளது. கடந்த கால முயற்சிகளைத் தாண்டி, கட்சியின் வாக்கு வங்கியை மேலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. தமிழக மக்கள் எப்போதும் நேருவின் பாரம்பரியத் தலைமைக்கே ஆதரவளித்து வந்துள்ளனர். அந்த வகையில், தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்குத் தமிழகம் அளிக்கத் தயாராக இருக்கும் பேராதரவை வாக்குகளாக மாற்றி, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் “நாற்பதும் நமதே” என்ற இலக்கோடு களம் கண்டு வெற்றிபெற, மாவட்டத் தலைவர்களாகிய நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்த தீர்மானத்தின் மூலம் உறுதி கூறுகிறோம்.

விஜய் - மாணிக்கம் தாகூர்​தீர்மானம் 2: “தமிழ்நாட்டின் அதிசயம்” – முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுக்குக் பாராட்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த குறுகிய காலத்திற்குள் “தமிழ்நாட்டின் அதிசயம்” என்று சொல்லும் அளவுக்குப் பல வரலாற்றுச் சாதனைகளை த.வெ.க. அரசு படைத்துள்ளது.

​கொள்கை உறுதியும் தெளிவான பாதையும்:

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க-வுக்கு ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்பட்டன. முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் நினைத்திருந்தால், பாஜாகவின் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவின் ஆதரவைப் பெற்று எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், அது மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து, மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்தார். இதிலிருந்தே அவரது கொள்கை உறுதியையும், தெளிவான அரசியல் பாதையையும் நாம் அறிய முடிகிறது.

​இரட்டைத் தாக்குதல்களை முறியடித்த அதிரடித் திட்டங்கள்:

கடந்த திமுக அரசு ஏற்படுத்திச் சென்றுள்ள பெரும் கடன் சுமை மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் ஒருபுறம், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் நெருக்கடிகள் மறுபுறம் என இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த இரண்டு மாதங்களில் ஆற்றியுள்ள சாதனைகள் அளப்பரியவை:

*​ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் 200 யூனிட் இலவச மின்சாரம்.
*சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு.
*​பள்ளிக் குழந்தைகளுக்கான எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.
*​பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படை.
*போதைப்பொருள்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள்.
*தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முதலீடுகளை ஈர்க்கும் தொலைநோக்குத் திட்டங்கள்.

அரசு நிர்வாகத்திற்குப் புதியவராக இருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், வருங்காலத்தில் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். போன்ற அசைக்க முடியாத மக்கள் சக்தியாக உருவெடுப்பார் என்பது திண்ணம். மக்கள் நலன் காக்கும் இந்த அரசுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.”

MUST READ