
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் வசித்து வருபவர் இரயில்வே போலீஸ் ஆய்வாளர் ராஜலட்சுமி. இவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் :
”கடந்த ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சவுக்கு சங்கர் தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் என்னைப்பற்றி முற்றிலும் பொய்யான, அவதூறான பதிவுகளை வெளியிட்டுள்ளார். நான் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், தவறான காரியங்களுக்குப் பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், பழிவாங்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
இந்த அவதூறுப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.”
சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விளக்கம் :
தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு குறித்தும் ராஜலட்சுமி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்றும், சட்டப்படி அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆய்வாளர் விமலா லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி முறையான சொத்துக் கணக்கீட்டுப் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், தனது வீட்டில் நடந்த சோதனையில் எந்தவொரு சட்டவிரோத ஆவணங்களோ, பணமோ அல்லது நகையோ கைப்பற்றப்படவில்லை என்றும் ராஜலட்சுமி விளக்கமளித்துள்ளார்.

”பதவி நீக்கம் முற்றிலும் கற்பனையானது”
சவுக்கு சங்கர் தனது பதிவில் கூறுவது போல, தனக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்றும், அது முற்றிலும் கற்பனையான குற்றச்சாட்டு என்றும் ராஜலட்சுமி மறுத்துள்ளார். சவுக்கு சங்கரின் இந்தப் பதிவுகள் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும், ஒட்டுமொத்த காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிக்கை
எனவே, சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆய்வாளர் ராஜலட்சுமி கோரியுள்ளார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த அவதூறு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கவும், அவரது சமூக ஊடகப் பக்கங்களை முடக்கவும், இதனைப் பகிர்ந்த மற்ற நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்புகார் தொடர்பாக ஆய்வாளர் ராஜலட்சுமி, அவரது கணவர் ஜான் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர்.
வழக்கு பின்னணி:
ஏற்கனவே, ஆய்வாளர் விமலா , அரசு அதிகாரி ஒருவரைப் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் சஸ்பெண்ட் செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறிக்கை தயார் செய்யச் சொன்னதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்ததாகவும், இதனைத் தொடர்ந்துதான் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் விமலா உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, இந்தச் சஸ்பெண்ட் உத்தரவு உள்நோக்கம் உடையது என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் நடவடிக்கைக்குத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
