கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த வாலிபரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில், வாலிபர் ஒருவர் தன்னை யாரோ வெட்ட வருகிறார்கள் எனக்கூறி கோவில் கருவறையினுள் சென்று ஒளிந்து கொண்டார். இதனை கண்ட கோவில் தரிசனத்துக்காக வந்திருந்த பெண்மணி ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் இதுகுறித்து கூறினார். உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு ஒளிந்திருந்த நபரை பிடித்து வெளியே இழுத்து வந்த தர்மஅடி கொடுத்தனர். அடி தாங்க வலியால் அலறிய வாலிபர் தன்னை ஒருவன் வெட்ட வருவதாகவும், அதனால் உள்ளே வந்து ஒளிந்து கொண்டதாகவும் கூறினான்.
இதனை தொடர்ந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். கோவிலுக்கி விரைந்து வந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வாலிபரின் அந்நபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்தியுள்ளதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாக கூறி கோவிலினுள் வந்து ஒளிந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.