எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்ற கோரி அதிமுக அமளி
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்பில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை உதயக்குமாருக்கு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் இந்த விவகாரத்தில் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளேன், தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள் என அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.
மரபின்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை, பெரும்பாலானா உறுப்பினர்களால் தேர்வான உதயகுமாருக்கு தர வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை என பழனிசாமி குற்றஞ்சாட்டினார். இதற்கு துரைமுருகன், எங்கள் முகத்தைக்கூட நேரலையில் காட்டியது இல்லை, நானே ஆயிரம் முறை பேசியுள்ளேன், அரசினர் தீர்மானம் உள்ளது. ஆகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் எனக் கூறினார்.
அதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தை முன்னிறுத்தி, சட்டப்பேர்வையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.