ஈரோடு கிழக்கில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுக வேட்பாளருக்காக பணியாற்றியிருக்கிறோம். இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கும். பொதுத்தேர்தலில் மற்றொரு கட்சி ஜெயிக்கும் என்ற வரலாறு தமிழகத்தில் உண்டு.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கான தேர்தல். ஆளுங்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது. ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான சாக்குபோக்குகளை திருமாவளவன் தேடி வருகிறார்.
வெளியேறுவது என்றால் வெளியேறிவிட வேண்டும். சாக்கு போக்குகளை கூறக்கூடாது” எனக் கூறினார்.