நேற்று 5 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே திரும்பிய நிலையில், 3 பேர் ராஜினாமா செய்தனர். இன்று இசக்கி சுப்பையாவும் விலகுவதால், வேலுமணி அணியின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. நேற்று 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை நேரில் சந்தித்த அவர், தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் மூலம், வேலுமணி அணியில் இருந்து வெளியேறும் முக்கிய தலைவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

2011ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் அணியில் இணைந்திருந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் திரும்பி, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்று தென் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய முகமாக விளங்கினார்.
தொங்கு சட்டமன்ற சூழலில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கும், தமிழக வெற்றி கழக அரசுக்கும் ஆதரவாக இசக்கி சுப்பையா வாக்களித்திருந்தார். புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், அந்த அணியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. நேற்று 5 பேர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பிய நிலையில், 3 பேர் ராஜினாமா செய்தனர். இன்று இசக்கி சுப்பையாவும் விலகியதால், வேலுமணி அணியின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்தியபாமா ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருந்தனர். தற்போது இசக்கி சுப்பையாவும் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் தவெக நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 44-லிருந்து 43 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
