அரியலூர் மாவட்டம் தத்தனூர் பகுதியில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காவல்துறை , வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மையத்தில் வெண்பான் கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவர் பணியில் இருந்துள்ளார். இவர் நேற்றிரவு உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ராஜேஸ்வரி உடன் பணியாற்றிய அலுவலர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாக்கு எண்ணும் பணிக்காக சென்ற பெண் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.