யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பெரம்பூர் மாணவி ஜீஜீ, இந்திய அளவில் 107-வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் 4 இடங்களை பெண்களே பிடித்து நிலையில் ஒட்டுமொத்தமாக 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பூரைச் சேர்ந்த மாணவி ஜீஜீ, இந்திய அளவில் 107-வது இடத்தையும், தமிழ்நாட்டு அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 361-வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரி சங்கர் 367-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்றுள்ள 933 பேரில் பொதுப்பிரிவில் 345 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினர் 99 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 263 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 154 பேரும், பழங்குடியினர் பிரிவில் 72 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.