spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

-

- Advertisement -

சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய பார்வதிஅம்மனிடம் வேல் வாங்கி சென்ற தளமாக விளங்கும் புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலன் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

murugar

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் கோயில்களில் மிக முக்கியமானது நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலவராகத் தனி சந்நிதி கொண்டு அருளும் இவ்வாலயத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கிய முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்த புராணம் கூறுகிறது.

அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் மேனி எங்கும் வியர்வை சிந்துவது இந்த ஆலயத்தின் அற்புத நிகழ்வு. இந்த அதிசயத்தைக் காண தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கார வேலனை மனமுருகி தரிசித்துச் செல்வார்கள். சிவன் மற்றும் பெருமாள் இருவரும் அருகருகே ஒரே ஆலயத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

we-r-hiring

sikkal singaravelan

நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகள், ராஜகோபுரம் மற்றும் திருக்கல்யாண மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டன. இந்த நிலையில் ஜூன் 29-ம் தேதி (வியாழக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள், உள்பிராகார மண்டபங்கள், மகா திருமண்டபம் ஆகியவைகளில் பக்தர்கள் நிரம்ப வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று மாலை சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் நடைபெற உள்ள திருக்கல்யாண வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான பக்தர்கள் குவிந்த காரணத்தால் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் பொது சுகாதாரத்துறை சார்பாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷிங் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாகை முதல் திருவாரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

MUST READ