பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஞான செளந்தரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக ஏ.பி.முருகானந்தம் 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்றுள்ளார்.
இந்நிலையில், திருமணமான சில மாதங்களில் ஞான செளந்தரி உயிரிழந்ததால், கடந்த 2016ஆம் ஆண்டு சீர்வரிசை பொருட்களை திரும்ப ஒப்படைக்கோரி பெண்ணின் தந்தை கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஏ.பி. முருகானந்தம் பல வாய்தாக்களில் தொடர்ந்து ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை கூடுதல் மகிளா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், வரும் நவம்பர் 27-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.