பரிதாபம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – கோவை மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நவீன மருத்துவத்துறை இவ்வளவு முன்னேறிய காலத்திலும், படித்த பொறியியல் பட்டதாரி தம்பதியினர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல், யூடியூப் (YouTube) பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பிரசவத்தின் மீது மோகம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா (32). பி.இ. (B.E.) பட்டதாரிகளான இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் குழந்தை அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் பிறந்த நிலையில், சசிகலா இரண்டாவதாக மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்தாலும், இரண்டாவது குழந்தையை எப்படியாவது இயற்கை முறையிலேயே பெற்றெடுக்க வேண்டும் என்று இந்த தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, சசிகலா கர்ப்பமுற்ற விவரத்தை ஆரம்பத்திலிருந்தே மருத்துவப் பரிசோதனைக்கோ அல்லது முறையான சிகிச்சைகளுக்கோ கொண்டு செல்லாமல் வீட்டிலேயே ரகசியமாக வைத்துள்ளனர்.
யூடியூப் பார்த்து பார்த்த பிரசவம்
கடந்த 24-ஆம் தேதி அதிகாலையில் சசிகலாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சசிகலாவின் சம்மதத்துடன் அவரது கணவர் கார்த்திக்கும், மாமியாரும் சேர்ந்து யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நிறுத்த முடியாத ரத்தப்போக்கு
குழந்தை நல்லபடியாகப் பிறந்த போதிலும், சசிகலாவுக்கு நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறாமல் தொடர்ந்து அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளார்.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனடியாக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சசிகலாவுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை
இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சசிகலா, சற்று நேரத்திற்கு முன்பாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் நேரில் சென்று விசாரணை நடத்தியிருந்த நிலையில், தற்போது இளம்பெண் சசிகலா உயிரிழந்ததை அடுத்து, ஊத்துக்குளி போலீஸார் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நவீன மருத்துவம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திலும், படித்த தம்பதியினர் செய்த இந்த விபரீத முயற்சியால் ஒரு இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
