இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிமன்றத் தீர்ப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எடுத்துள்ள அணுகுமுறை சரியானதல்ல என்றும், இந்தத் தீர்ப்பு சமூகநீதி வரலாற்றையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் புறக்கணிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகளையும் மறுக்கும் செயலாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இந்த 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது என்றும், அதனை ரத்து செய்வது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானது என்றும் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு என்பது பெரியார், அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் உருவாக்கிய சமூகநீதியின் மண் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் எந்த முயற்சியும் ஏற்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்” என்ற பிரிவு தமிழ்நாடு சட்டம் 45/1994-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வமான வகைப்பாடு என்றும், அதற்கான இடஒதுக்கீட்டை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தின் பெரிய அமர்வில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 2007-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
