
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் (வயது 73) சென்னையில் இன்று காலமானார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, சின்னவீடு, தூறல் நின்னு போச்சு போன்ற எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.

இயக்குநர் பாக்யராஜ் மறைவு செய்தி ஒட்டுமொத்த திரை உலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவிற்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சென்னை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய… pic.twitter.com/UgpbuWDwC5
— M.K.Stalin (@mkstalin) June 27, 2026
