தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. டி. சரத்குமார் மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரலையில் தோன்றி, அந்த வீடியோ குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமான நேற்று, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அதே நாளில், அவரது அமைச்சரவை சகா ஒருவரின் பழைய வீடியோ வெளியாகி த.வெ.க அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை வீடியோவில் இருப்பது என்ன?
மின்னல் வேகத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர் சரத்குமார், தனது மொபைல் போன் திரையின் மீது இருக்கும் ஒரு வெள்ளை நிறப் பொருளை ஏடிஎம் (ATM) கார்டு மூலம் நசுக்கி, ஒரு நேர்க்கோடாக (Line) மாற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

”தக் லைஃப்” (Thug Life) என்ற வாசகத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்படும் இந்த பழைய வீடியோவைச் சுட்டிக்காட்டி, அமைச்சர் சிந்தெடிக் (Synthetic) வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் என்று திமுக வழக்கறிஞர் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத்குமாரின் முழுமையான விளக்கம்
சமூக வலைத்தள விமர்சனங்களுக்கும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்
3 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ: இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல; சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றபோது எடுக்கப்பட்டது. அப்போது அவரது 1.5 வயதுக் குழந்தை கடுமையான இருமலால் அவதிப்பட்டுள்ளது. குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை அப்படியே விழுங்கத் தெரியாததால், அதைத் தூளாக்கிக் கொடுக்குமாறு அவரது மனைவி கேட்டுள்ளார்.
மைதானத்தில் மாத்திரையை நசுக்க வேறு வசதி இல்லாததால், மொபைல் போன் திரையின் மீது மாத்திரையை வைத்து, ஏடிஎம் கார்டு மூலம் நசுக்கிப் பவுடராக்கி தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்துள்ளனர். அதனை அங்கிருந்த நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் சூழ்ந்திருக்கும் ஒரு பொது மைதானத்தில் அமர்ந்து கொண்டு யாராவது போதைப்பொருள் பயன்படுத்த முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரின் உருக்கமான பேச்சு
“மாத்திரை நசுக்கிய சாதாரண வீடியோவை, ஏதோ நான் போதைப்பொருள் பயன்படுத்தியது போல சித்தரித்துத் தவறாகப் பரப்பி வருகிறார்கள். இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தயவுசெய்து உண்மை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.” என அமைச்சர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி பூஜா ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசியல் களத்தில் கிளம்பும் கேள்விகள்
அமைச்சர் தரப்பில் மாத்திரை என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து வருகின்றன. மாத்திரையை நசுக்குவதற்குப் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் கையாளும் அதே “கோடு போடும்” (Line forming) உத்தியை ஏன் பயன்படுத்த வேண்டும் என்றும், அருகில் ரூ.500 நோட்டு ஏன் சுருட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “இதுகுறித்து முதல்வர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர். த.வெ.க அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே அமைச்சரின் இந்த வீடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
முறிந்தது 9 ஆண்டுகால பந்தம்.. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக..!!
