மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொத்தம் 459
காவல்துறையினருக்கு குடியரசுத்தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து நிகழச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதக்கங்கள் பெற்றுள்ள காவல்துறையினருக்கு வாழ்த்துகள் என்றும், நானே பதக்கங்கள் வாங்கியது போன்ற மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பான நிலையில் உள்ளதாகவும் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவல்துறையை மேலும் நவீனமயமாக்க, திராவிட மாடல் அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதால் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து, பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுமுறை ஒரு ஆண்டு வழங்கப்படுவதாகவும், மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், தங்களது பெற்றோர் அல்லது கணவர் வீட்டார் வசிக்கும் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு பணியாற்றலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.