Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

-

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

senthilbalaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது. இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
File Photo

இதன்படி அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர்.அருண் குமார் ஆஜராகி, குறுகிய காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

MUST READ