இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபமாக கீழ்ப்பாக்கம் வால்டஸ் சாலையில் உள்ள இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மணியளவில் இல்லத்திலேயே உயிரிழந்தார்.
பேராயர் எஸ்ரா சற்குணம் தமிழ்நாட்டில் அரசியல் தளத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர். அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்தவர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 19 ஆம் தேதி இவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறுவது வழக்கம். அந்த வகையில்
இரண்டு ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ்ப்பாக்கம் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் சபைகளின் இந்தியாவின் பேராயர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராயர் எஸ்ரா சற்குணம் திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். குறிப்பாக திமுக முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அதேபோன்று தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அதிக நட்பில் இருந்து வந்தார்.
இவரது பூத உடல் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் 3 மணி நேர பிரார்த்தனைக்குப் பிறகு உடல் எம்பார்மிங் செய்வதற்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட உள்ளது. வரும் 26 ஆம் தேதி பொதுமக்களின் அஞ்சலிக்காக சிஎஸ்ஐ பெயின் பள்ளியில் வைக்கப்பட்டு உடல் நல்லடக்கம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராயர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணம் உடல் நலக்குறைவினால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திராவிட இயக்க சிந்தனையுடன் பின்னிப் பிணைந்த பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தலைவர் கலைஞரோடும் என்னோடும் பங்கேற்று அவருடன் உரையாடிய நிகழ்வு இந்த நேரத்தில் என் இதயத்தில் நிழலாடுகிறது. பேராயர் சற்குணம் அவர்கள் மாறாத அன்போடு என்னுடனும் பழகிவந்வர்.
என்னுடைய பிறந்த நாளில் என்னை வாழ்த்த தவறாதவர். பேராயர் சற்குணம் அவர்கள் கிரிஸ்த்துவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப் படவும், அவர்களாது உரிமைகளை வென்றெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுப்பட்டு வந்தவர். பேராயர் சற்குணம் அவர்களின் மறைவு கிறிஸ்த்துவ மக்களுக்கு மட்டுமல்லாமல் சமூகநீதி மீது பற்றுக் கொண்ட எல்லோருக்கும் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் இசிஐ சபையினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.