மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? – எடப்பாடி பழனிசாமி
மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? திமுக அமைச்சருக்கு இதுவா முக்கியம்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் கூட்டணியில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி சுமார் 700 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் 5 நாட்களில் 40 கோடி வரை வசூல் செய்துள்ளது. அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்து மிகத் தெளிவாக கூறும் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? திமுக அமைச்சருக்கு இதுவா முக்கியம்? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை. இதுவா வயிற்று பசியை போக்க போகுது? மாமன்னன் திரைப்படம் ஓடுவது முக்கியமில்லை. மக்கள் நலனில் திமுக அரசு அக்கறை செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.