ஈரோடு இடைத்தேர்தல்- 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,223 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு கடந்த 27 ஆம் தேதி 238 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற நிலையில் இந்த இடைத்தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவானது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை ஈரோடு அடுத்த சித்தோடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 8 மணி முதல் தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் தபால் வாக்குகளோடு சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது.

மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையானது காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்போடும் அதேபோல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோரின் கண்காணிப்பில் நடைபெற்றது.
குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கீழ்த்தளத்தில் பத்து மேசைகளும், அதேபோல் மேல் தளத்தில் ஆறு மேசைகள் என மொத்தம் 16 மேசைகளில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணும் பணி நடைபெற்று வந்தது.
மேலும் இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்கு முதல் 15 வது சுற்று முடியும் வரை தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 15 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து இரவு 8.15 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இளங்கோவன் 110156 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43923 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 10827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர். மேலும் நோட்டாவுக்கு 797 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
மேலும் இந்த தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.



