கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று ஆனந்த ஜோதியின் தந்தை நரசிம்மனிடம் கண்ணீா் மல்க தவெக தலைவா் விஜய் கூறினாா்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஆம்னி பேருந்துகள் மூலமாக வரவழைத்து அவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவர் மனைவி ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா ஆகியோா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவரையும் அவரது குடும்பத்தினரையும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள அறையில் தனியாக விஜய் சந்தித்தாா்.
மேலும் ஆனந்த ஜோதி கூறுகையில், “விஜய் இந்த துயர சம்பவத்திற்கு பிறகு பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் உடல் இளைத்து மெலிந்து காணப்பட்டாா். மன அளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவரை காணவே தங்களுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள் என்று கூறி எனது தாயாா் கிருஷ்ணவேணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாா். மேலும் உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காமல் கேளுங்கள் எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன் என்றும் கூறினார்.

முன்பு வீடியோ காலில் பேசிய போது தங்களை நேரில் சந்திப்பதாக கூறியிருந்த நிலையில், நீங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் கூட உங்களை தனிப்பட்ட முறையில் நான் சந்தித்திருக்க முடியாது என்றும் கூடவே கட்சியினர் மற்றும் போலீசார் இருந்திருப்பார்கள் என்றும், காவல்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் கரூர் வர முடியவில்லை என்றும் கூறினாா். விஜய் காசு கொடுத்தார் என்பதற்காக போகவில்லை, மனிதாபிமான அடிப்படையிலும் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் தான் அவரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றதாகவும், எங்களுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் விஜய் ஏற்படுத்தி தந்தார் என்றும் கூறினாா்.
மேலும், ஏன் இந்த துயர சம்பவம் நடந்தது என்று நான் கேட்டபோது, முதலில் அவரிடம் தாங்கள் மன்னிப்பு கூறியதாகவும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று கூறிய போதிலும் குழந்தைகள் தங்கள் மீது உள்ள பாசத்தின் காரணமாக காண வேண்டும் என்ற ஆசையில் அவர்களை அழைத்து வந்துள்ளனா் என்று கூறினாா்.
ஆனால் நீங்கள் வரும்போது இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது என்று நான் கேட்ட போது, “என்னை மன்னித்து விடுங்கள் இந்த சம்பவம் எனக்கு தெரியாது என்றும் விஜய் கூறினார்.
மேலும் சம்பவம் நடந்த போது மூன்று பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் வசதிகள் ஏதுமில்லை எனவும் மீண்டும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனது மனைவி மற்றும் இளைய மகள் இறந்து விட்டதாகவும் பெரிய மகள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் அரசு கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் எந்த வித சிகிச்சையும் அளிக்காததால் தனது பெரிய மகளையும் இழந்ததாகவும் விஜய் ஆனந்த ஜோதி கண்ணீா் மல்க கூறினார்.
மேலும், ஆனந்த ஜோதியின் தந்தை நரசிம்மன் கூறுகையில், “விஜய் மிகவும் உடல் மெலிந்து மனக்கவலையில் இருந்ததாகவும் அதனை பார்க்கும்போதே தங்களது கஷ்டமாக இருந்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் அவர் அழைத்ததின் பேரில் நேரில் சந்தித்ததாகவும் நடந்த துயர சம்பவத்திற்கு அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கூறினார் என்றும் உங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள் செய்து தருவதாகவும் கூறினார். கோடி கோடியாக பணத்தை கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா என விஜய் கண்ணீர் மல்க கூறினார்.


