புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிப்பு
புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், “ஜூன் ஒன்றாம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரைக்கால், மாஹே மற்றும் ஏனால் ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும்” என அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பத்தின் கடுமை இன்னும் தணியாததை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 7-ஆம் நாள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.