ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி ‘மண் சோறு’ சாப்பிட்ட ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெற்றி பெற திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி சன் பிக்ஸர்ஸின் தயாரிப்பில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ரஜினி மன்ற மாவட்ட பொறுப்பாளர் பாலதம்புராஜ் தலைமையில் ரஜினி ரசிகர்கள் கோவிலுக்கு வந்தனர். திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன் கோவிலில் நீராடி முழங்காலால் நடந்து வந்து கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சனம் செய்தார். தொடர்ந்து அவருடன் ரசிகர்கள் ரஜினி ஜெயமணி, ரஜினி முருகவேல் ஆகியோர் கோவில் வாசலில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். முன்னதாக தேங்காயில் ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என எழுதி அதை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.