Homeசெய்திகள்க்ரைம்பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் கைது:

பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் கைது:

-

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது: கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும்.

நேற்று 5வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து சென்றனர். கடந்த 21ஆம் தேதி (ஞாயிறு) வழக்கம் போல பக்தர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில் ஒருவர் கொண்டு வந்த சிறப்பு நுழைவு சீட்டை கோவில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்ட போது அது கோவில் நிர்வாகத்தில் அளிக்கப்பட்டது அல்ல என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது 5பேர் கொண்ட குழுவாக பவானி அம்மன் ஆலயத்திற்கு வந்ததாகவும், விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு கோவிலின் வெளியே ஒருவரிடம் இருந்து வாங்கி வந்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் போலி நுழைவு சீட்டை விற்பனை செய்த நபரை தேடி சென்ற போது அவர் பவானி அம்மன் கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இது குறித்து கேட்டபோது செயல் அலுவலரையும், கோவில் ஊழியரையும் அசிங்கமாக பேசி மிரட்டியுள்ளார். இது குறித்து கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் போலி நுழைவு சீட்டை விற்பனை செய்தது உறுதியானது.

போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர்

கோவிலில் தற்போது பணியாற்றும் இருவர் கோவில் சிறப்பு நுழைவு சீட்டுகளை திருடி வந்து வெளியே வைத்து கொண்டு பணவசதி கொண்ட பக்தர்களிடம் மோசடியாக விற்பனை செய்தது தெரிய வந்தது.

போலி நுழைவு சீட்டை 1000ரூபாய்க்கு விற்பனை செய்த முன்னாள் ஒப்பந்த ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது

இதனையடுத்து முன்னாள் ஒப்பந்த ஊழியர்  அரியப்பாக்கத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (28), கோவிலில் தற்போது பணியாற்றி வரும் காவலாளிகளான பெரியபாளையத்தை சேர்ந்த வினோத் (33), வடமதுரையை சேர்ந்த தினகரன் (47) ஆகிய மூவரையும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் மிரட்டுதல், மோசடி உள்ளிட்ட 6பிரிவுகளின் கீழ் கைது செய்த பெரியபாளையம் காவல்துறையினர் அவர்களை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

MUST READ