நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்கு நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.
வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கொடி ஆடு மற்றும் கிடாக்கள் ரூபாய் 1 கோடி வரை விற்பனையாகியுள்ளன.
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், கால்நடை வளர்ப்பவர்கள் வருகை தருவது வழக்கம்.
வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அதிக அளவில் செம்மறி ஆடுகள், கிடாக்கள், வெள்ளாடுகள் மற்றும் குறும்பாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. சந்தையில் ஆடுகள் வாங்க மக்கள் கூட்டமும் அதிக அளவில் இல்லை விற்பனையும் மந்தமாக காணப்பட்டது.
ஆடுகள் வரத்து சற்று குறைவாக இருந்ததால் கிடா ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. 25 கிலோ எடையுள்ள கிடா 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போனது. செம்மறி ஆடுகள் ரகம் வாரியாக குறைந்தபட்சம் ரூபாய் 7 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் வரை விலை போனது.பண்டிகை காலங்களில் ஒரு கோடி முதல் 5 கோடிக்கு ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெறும். ஆனால் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் வரத்து குறைவாகவும் விற்பனை மந்தமாகவும் காணப்பட்டது.