அரசு கேபிள் டிவி மூலமாக 2 மாதத்திற்குள் குறைந்து செலவில் HD சேவை வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பனையூர் பாபு எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியின் நிர்வாக குளறுபடிகள் காரணமாக அரசு கேபிள் டிவி இணைப்புகள் சரிபாதி அளவுக்கான சரிவை சந்தித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
அரசு கேபிள் டிவி நிர்வாகத்தில் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு அடுத்த இரண்டு மாதத்திற்குள் அரசு கேபிள் டிவி மூலமாக குறைந்த செலவில் எச்டி சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கேபிள் டிவி தொழிலாளர் நல வாரியம் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி அமைந்த பிறகு நல வாரியம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.