ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 7 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்து தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் மழை மற்றும விஜயவாடா – காசிபேட்டை பிரிவில் உளள ராயனபாடு ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்லும் 7 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை சென்டரலில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய, சென்னை சென்டரல் – ஜெய்ப்பூர் அதிவிரைவு ரயில், மாலை 6.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல், சென்னை சென்டரலில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நாளை காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்டரல் – ஹெச். நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ், நாளை காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்டரல் – அகமதாபாத் நவஜிவன் எக்ஸ்பிரஸ் யில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் பெங்களுரில் இருந்து நாளை காலை 7.15 மணிக்கு புறப்படும் கே.எஸ்.ஆர். பெங்களுரு , தனாப்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்டரலில் இருந்து நாளை மாலை 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் பிலாஸ்புர் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.