Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலியைத் துண்டு துண்டாக கொன்ற கொடூரம்: போலீசுக்கு அஞ்சி தாயுடன் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை

காதலியைத் துண்டு துண்டாக கொன்ற கொடூரம்: போலீசுக்கு அஞ்சி தாயுடன் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை

-

- Advertisement -

காதலியைத் துண்டு துண்டாக எரித்துக் கொன்ற கொடூரம்: கர்நாடக போலீசுக்கு அஞ்சி தாயுடன் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை – ஓசூர் அருகே திடுக்கிடும் பின்னணி!
வாலிபர்

ஓசூர் அருகே தாய் மற்றும் மகன் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், பெங்களூரு காதலியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்து எரித்த விவகாரம் கர்நாடக போலீசாருக்குத் தெரிந்ததால், தப்பிக்க வழியின்றி அவர்கள் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

we-r-hiring

ஓசூர் நிருபர் கார்முகில் வழங்கும் அந்தப் பரபரப்பான செய்தித்தொகுப்பு:
​நள்ளிரவில் வந்த வாட்ஸ்-ஆப் கடிதம்: ஏரியில் மிதந்த சடலங்கள்
​கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30). இவர் கெலமங்கலம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜசேகர், தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களின் வாட்ஸ்-ஆப் எண்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அதில், “நானும் எனது தாய் மஞ்சுளாவும் (56) தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் தற்கொலைக்கு நிலப் பிரச்சினை காரணமாகப் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ருத்ரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாயையும் என்னையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கெலமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, அது தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஏரி எனக் காட்டியது. விடியற்காலையில் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் போலீசார் அங்கு சென்று தேடியபோது, ராஜசேகர் மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகிய இருவரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் சடலங்களாக ஏரியில் மிதந்தன. உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

நிலப் பிரச்சினை அல்ல… கொலையைத் திசைதிருப்ப நாடகம்!
​நிலப் பிரச்சினையால் தான் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் எனப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோதுதான், இதற்குப் பின்னால் இருந்த அதிர்ச்சியூட்டும் கொலைக் குற்றப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
​ராஜசேகர், பெங்களூரு ஆடுகோடி பகுதியில் தங்கி பியூட்டி பார்லர் நடத்தி வந்த நளினி (30) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் காதலி நளினியை மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் சென்ற ராஜசேகர், அங்கு வைத்து அவரை கொடூரமாகக் கொலை செய்து, உடலைத் தனிமவழியாகக் காட்டுப் பகுதியில் எரித்துள்ளார்.

கர்நாடக போலீசாரிடம் சிக்கிய கார்: மாட்டிக்கொண்ட கொலையாளி
​கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பௌகாவி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அங்கு கருகிய நிலையில் இருந்த நகைகள் மற்றும் வாட்சை வைத்துக் கர்நாடக போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடி (Tollgate) சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜசேகரின் கார் அந்தச் சமயத்தில் அங்குச் சென்று வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், நளினியின் தோழிகளிடம் நடத்திய விசாரணையில் ராஜசேகருடன் அவர் காதலில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் ராஜசேகரின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு, “உங்களுடைய கார் மண்டியா டோல்கேட் பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது, அதுகுறித்து விசாரிக்க வேண்டும்” எனக் தந்திரமாகக் கூறியுள்ளனர்.

கொலையை மறைக்கத் தாயையும் கூட்டிக்கொண்டு தற்கொலை
​போலீசாரின் அழைப்பால் கடுமையான பதற்றமடைந்த ராஜசேகர், காதலியைக் கொலை செய்த வழக்கில் தான் கைது செய்யப்படுவது உறுதி என்பதை உணர்ந்தார். இதனால், தண்டனையில் இருந்து தப்பிக்கத் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
​அதே நேரத்தில், தான் செய்த கொலைக் குற்றம் உலகிற்குத் தெரியக் கூடாது என்பதற்காகப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த சிறிய வழிப் பிரச்சினையைக் காரணம்காட்டி, கடிதம் எழுதி விபரீத நாடகமாடியுள்ளார். பின்னர், தனது தாயையும் சம்மதிக்க வைத்து, துணியால் இருவரையும் ஒன்றாகக் கட்டிக்கொண்டு தேன்கனிக்கோட்டை ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

விசாரணையில் தொய்வு:
​ராஜசேகர் தற்கொலை செய்துகொண்ட விபரமறிந்து கர்நாடக போலீசார் தேன்கனிக்கோட்டை விரைந்துள்ளனர். காதலியை அவர் எதற்காகக் கொலை செய்தார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், குற்றவாளி ராஜசேகர் மற்றும் பாதிக்கப்பட்ட நளினி ஆகிய இருவருமே இறந்துவிட்டதால், கொலையின் உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
​இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்துக் குடும்பத்தினர் பேசுகையில், “போலீஸ் விசாரணைக்கு பின்புதான் எங்களுக்கே இந்த முழு விபரமும் தெரியவந்தது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ