Homeசெய்திகள்தமிழ்நாடு"திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்": எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!

“திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்”: எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!

-

- Advertisement -

MR Vijayabhaskar

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் மாற்றுக்கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தனது விலகலுக்கான காரணங்களை விளக்கி மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

we-r-hiring

 ​”அதிகார அடக்குமுறையை எதிர்த்து நின்றவன்”

​”புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாதையில் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவன் நான். பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல. அம்மா அவர்களின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பின்னால் உறுதியாக நின்றவன் நான்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் கரூரில் அப்பட்டமான அதிகார அடக்குமுறைகளையும், தொண்டர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட துயரங்களையும் சந்தித்தோம். அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகளும், கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பாய்ந்தன. அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, அதிகார பலம், பண பலம் கொண்ட செந்தில் பாலாஜியை எதிர்த்துப் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நான்.”

“எடப்பாடியாரின் சந்தர்ப்பவாத முடிவு”

​”ஆனால், இத்தனை தியாகங்களுக்கும் எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் கஷ்டங்களையும் சந்தித்தோமோ… இன்று அதே தீய சக்திகளுடன் (திமுக) கைகோர்த்து, அவர்கள் உதவியோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

EPS - MR vijayabhaskar

​தீய சக்தி என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்? அண்ணன் எடப்பாடியார் அவர்களே… நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. ஆனால், தொண்டர்களின் உணர்வுகளைத் துச்சமாக மதித்து, நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான, சந்தர்ப்பவாத முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவில் நிறுத்தியுள்ளது. இந்த முடிவிற்குப் பலியாக நானும் என் தோழர்களும் தயாராக இல்லை.”

“கண்ணீருடன் விடைபெறுகிறேன்”

​”என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன்.

என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே… உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

​திமுகவுடன் அதிமுக தலைமை ரகசிய சமரசம் செய்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியை விட்டு விலகியிருப்பது தமிழக அரசியலிலும், குறிப்பாக அதிமுக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ