நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுச்சந்தையில் அரிசி விற்பனை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் அரிசி விலை கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், 26 கிலோ மூட்டைக்கு 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,500 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வு குறித்த முழுமையான விவரங்கள் கீழே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கிலோ கணக்கில் அரிசி விலை மாற்றங்கள்,
பொன்னி அரிசி – கடந்த மாதம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 10 ரூபாய் உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பச்சரிசி – கடந்த மாதம் 54 ரூபாயில் இருந்து இந்த மாதம் 10 ரூபாய் உயர்ந்து 64 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாஸ்மதி அரிசி – கடந்த மாதம் 90 ரூபாயாக இருந்த ஒரு கிலோ அரிசி, இந்த மாதம் 5 ரூபாய் உயர்ந்து 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சீரகசம்பா அரிசி – கடந்த மாதம் 160 ரூபாயாக இருந்த விலை, இந்த மாதம் 20 ரூபாய் உயர்ந்து 180 ரூபாயாக எகிறியுள்ளது.
மாற்றமில்லாதவை – சந்தையில் கருப்புகவனி (ஒரு கிலோ 140 ரூபாய்) மற்றும் சிவப்பரிசி (ஒரு கிலோ 50 ரூபாய்) ஆகியவற்றின் விலையில் இந்த மாதம் எந்த மாற்றமும் இல்லை.
26 கிலோ மூட்டை அரிசி விலை மாற்றங்கள்
பொதுவாக அனைத்து அரிசி மூட்டைகளும் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், சீரகசம்பா மட்டும் வரலாறு காணாத விலையேற்றத்தைக் கண்டுள்ளது.
தமிழ்நாடு பொன்னி அரிசி – கடந்த மாதம் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூட்டை, இந்த மாதம் 200 ரூபாய் உயர்ந்து 1,400 ரூபாயாக மாறியுள்ளது.
ஆந்திரா பொன்னி அரிசி – கடந்த மாதம் 1,150 ரூபாயில் இருந்து இந்த மாதம் 200 ரூபாய் உயர்ந்து 1,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பாஸ்மதி அரிசி: கடந்த மாதம் 2,250 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை, இந்த மாதம் 200 ரூபாய் உயர்ந்து 2,450 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சீரகசம்பா அரிசி: கடந்த மாதம் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூட்டை, இந்த மாதம் மிக விசித்திரமாக 1,500 ரூபாய் வரை உயர்ந்து 4,000 ரூபாயாக விற்பனையாகிறது.
இதர மூட்டை அரிசி விலை நிலவரம்
பிபிடி பொன்னி அரிசி மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மூட்டைக்கு 110 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நெல் தட்டுப்பாடு மற்றும் கொள்முதல் விலையேற்றம் காரணமாக, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொன்னி, பச்சரிசி மற்றும் இட்லி அரிசியின் இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பதம் பார்த்துள்ளது.
