கடலூரில் வீடு, வீடாக ‘கியூஆர்’ கோடு அட்டை ஒட்டும் பணி தீவிரம்
கடலூர் மாநகராட்சியின் சேவைகளை பெற முதன் முதலாக அனைத்து வீடுகளுக்கும் கியூ ஆர் கோடு அட்டை வழங்கும் பணியினை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி கடலூர் மாநகராட்சியின் சேவைகளான குப்பைகளை அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரிய வைத்தல், சாலை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க சிரமப்பட வேண்டி இருக்கும் நிலையில், பொது மக்களின் அந்த சிரமங்களை குறைக்கும் வகையில் முதன் முதலாக கியூஆர் கோடு எனும் அட்டை அனைத்து வீடுகளிலும் கடலூர் மாநகராட்சி சார்பாக ஒட்டப்பட உள்ளது.
கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூஆர் ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. கடலூர் மாநகராட்சி முழுவதும் 33,000 கியூஆர் கோடு அட்டை ஒட்டும் பணியினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா கியூஆர் கோடு அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களைக் கொண்டு இப்பணி செயல்படுத்தப்பட உள்ளது.
தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கியூ ஆர் கோடு அட்டைகளை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவித்து மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.