தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அன்புமணியின் ஆதரவாளர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வருகம்பட்டி என்னும் பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ அருள் காரில் சென்று கொண்டிருந்தபோது, 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக கட்சி இருபிரிவாக பிளந்துள்ளது. இதில் எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் தரப்பில் இருப்பதால், அன்புமணி தரப்பு அவர்மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அருள் ஆதரவாளர்களும், அன்புமணி ஆதரவாளர்களும் கற்கள் மற்றும் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும், அருளின் கார் கண்ணாடிகளை உடைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக எம்.எல்.ஏ அருள் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பேசியதாவது, “துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம், அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதிக் 6 கார்கள் சேதமடைந்தன. அன்புமணியின் ஆதவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.” என்று தெரிவித்தார்.


