சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.

இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த உத்தரவைக் காரணம் காட்டி, சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தான் பொறுப்பேற்க வேண்டும்.
‘குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக’ தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன். சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிடகழகம்
வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அ.இ.அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?


