கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் நேற்று 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அதன்பின் அவரது அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், பெட்டியில் எடுத்து செல்லப்பட்டது சொத்து ஆவணங்களா என கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் கரூர் அருகே மாயனூர் எழுதியாம்பட்டியில் உள்ள சங்கர் ஆனந்தின் பண்ணை வீடு, கரூர் காந்தி நகர் பழனியப்பா தெருவில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை தொடர்கிறது. முன்னதாக கரூர் அருகே கொங்கு மெஸ்ஸ்க்கு வைத்த சீலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்,டாஸ்மாக் முகவர்கள் என,40 இடங்களில்,மே 26-ல் சோதனை தொடர்ந்தது. சோதனையில் இதுவரை 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.