“நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு பூனைக்கும் நண்பனாக, பாலுக்கும் காவலனாக இரட்டை வேடம் போடுகிறது. வெற்று வார்த்தை ஜனநாயகம் உதவாது; செயலில் ஜனநாயகனாக வாழ வேண்டும்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாஞ்சோலை தொழிலாளர் உரிமை, லாக்-அப் மரணம் மற்றும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வுரிமை மீட்டெடுப்பு 28-வது ஆண்டு நினைவுப் பேரணிக்கு பின், பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசிய அவர்:
ரேஷன் பொருட்கள் மறுப்பு: கடந்த 8 மாதங்களாக மாஞ்சோலை மக்களுக்குச் சட்டபூர்வமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி, அதிகாரிகள் மறைமுகமாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
2006 வன உரிமைச் சட்டம்: இந்தச் சட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று முதலமைச்சரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
தூத்துக்குடி லாக்-அப் மரணம்
தூத்துக்குடி அருணாசலம் என்பவரின் காவல் மரணம் குறித்து வேதனை தெரிவித்த கிருஷ்ணசாமி, “விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது நன்றாக இருந்த இளைஞர் உயிரிழந்திருப்பது ஏற்புடையதல்ல. தொடரும் காவல் நிலையச் சாவுகள் குறித்து முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
நீட் முறைகேடு & மாணவர்கள் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் பேசுகையில், நீட் தேர்வு கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம் கட்சி இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தால் மட்டுமே அதிகாரிகள் சரியாகச் செயல்படுவார்கள் என்றும், பிரதமர் காலம் தாழ்த்தி வீடியோ வெளியிட்டாலும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனக் கூறினார்.
சினிமா மாயை உதவாது!
அமைச்சர்கள் திரையரங்குகளில் படம் பார்ப்பது மற்றும் தவெக அரசின் அணுகுமுறை குறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்:
திரை மாயை: திரை மாயை கொஞ்ச காலம்தான் இருக்கும். எல்லா காலத்திற்கும் ரீல்ஸ் உதவாது, பயனளிக்காது.
இரட்டை வேடம்: மாநில அரசு ஒன்றிய அரசுக்கு நண்பனாகவும் நடந்துகொண்டு, வெளியே நீட்டை எதிர்ப்பது போலப் பேசுகிறது.
ஆதாய அரசியல்: வைகோ போன்றவர்கள் சந்தர்ப்பத்திற்காகவும் சொந்த ஆதாயத்திற்காகவும் கட்சிகளில் இணைகிறார்கள்; அதுவே சில கட்சிகளுக்குக் கேரக்டராகிவிட்டது எனத் தெரிவித்தார்.
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: மீன் உருவம் பொறிக்கப்பட்ட அரிய சுடுமண் பானை கண்டெடுப்பு!
