அரசுக்கான ஆதரவு தொடரும்; கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் கூட்டாக பேட்டி தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை என்றும், எனினும் தவெக அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு:
இதற்கிடையே, இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்துப் பேசினர்.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:
”நாங்கள் தவெக ஆட்சியிலோ அல்லது கூட்டணியிலோ அங்கம் வகிக்கவில்லை. அந்த காரணத்தினாலேயே இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும், தமிழக வெற்றிக்கழக அரசுக்கான எங்களது வெளி ஆதரவு தொடர்ந்து நீடிக்கும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கோரிக்கை:
இன்றைய சந்திப்பின் போது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் தீர்மானங்கள் கொண்டு வருவதற்கு முன்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்; அதன் பின்னரே சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும், தமிழக அரசின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும், தமிழக அரசுத் துறைகளில் உள்ள ஒப்பந்த பணியாளர் முறையை (Contract Labor System) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.”
இவ்வாறு இடதுசாரி தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.
