சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்களாக (Personal Assistants) நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், விதிகளைப் பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் புதிய தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து விசாரணை:
நீதிபதிகளின் உதவியாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து Suo Motu) வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணையை நடத்தியது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த நியமனங்களில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, 17 பேரின் நியமனங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அவகாசம் குறித்து நீதிபதிகள் விளக்கம்:
விசாரணையின் போது விதிகளின்படி, இப்பதவிகளுக்கு உரிய தகுதியைப் பெறுவதற்காக 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதன்படி, திறன் தேர்வில் (Skill Test) தேர்ச்சி பெறுவதற்கு ஓராண்டு காலமும், சுருக்கெழுத்து தேர்வில் (Shorthand Test) தேர்ச்சி பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளும் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.
பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தி:
நீதிமன்ற நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நீதிபதிகள், உரிய விதிகளைப் பின்பற்றாமல் இத்தகைய முக்கிய நியமனங்களை மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்று கவலை தெரிவித்தனர். நீதியை நிலைநாட்டும் நீதிமன்றமே விதிகளை மீறக்கூடாது என்பதை அவர்கள் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
மேலும், தற்போது பணியில் உள்ளவர்கள் உரிய தகுதியைப் பெறவில்லை என்றால், மாற்று ஏற்பாடாக நேரடி தேர்வு முறையை (Direct Recruitment) முழுமையாகப் பின்பற்றி தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
