மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழிவகுக்கும் ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026’-ஐ மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை:


மாநிலங்களின் நிதி சுயாட்சி பாதிப்பு:
இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ் மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை ஒன்றிய அரசுக்குச் செல்கிறது. இது மாநிலங்களின் வருவாய் உரிமையைப் பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாகப் பாதிக்கும். அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் படிப்படியாகப் பறிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது:
மாநிலங்களுக்கு உள்ள கனிம உரிமைகள் தொடர்பான வரி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. இத்தகைய சூழலில், மத்திய அரசு இச்சட்டத்தைக் கொண்டு வருவது மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் செயலாகும். கனிம வளம் நிறைந்த தமிழ்நாட்டின் வருவாயையும், பொருளாதாரத் தன்னாட்சியையும் இச்சட்டத்திருத்தம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
பழங்குடியினரின் வன உரிமைகளுக்கு ஆபத்து:
இச்சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் நிலம், வாழ்வாதாரம் மற்றும் வன உரிமைகள் சட்டம் வழங்கும் சமூக உரிமைகளைப் பாதிக்கும். கிராம சபையின் ஒப்புதல் மற்றும் பங்கேற்பைப் பாதுகாக்காமல், சுரங்கத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பழங்குடியின மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகும்.
தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்:
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும், ஒன்றிய பாஜக அரசு இச்சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
