பாஜகவினர் அம்பேத்கருக்கு மரியாதை செய்வது நாடகம்- பொன்முடி
தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி, ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நகர திமுக அலுவலகத்தில் இருந்து 200 மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அம்பேத்கர் புகழ்பாடி முழுக்கமிட்டனர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமணன் மற்றும் புகழேந்தி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ”தமிழ் மீதும் தமிழர்களின் கொள்கையின் மீதும் புரிந்து கொண்டு தமிழக ஆளுநர் ரவி தமிழ் தான் சிறந்த மொழி என்று பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஒன்றிய பாஜக அரசு திடீரென அம்பேத்கர் மீது பற்று கொண்டு சிலை திறப்பது என்று எல்லாம் கூறுவது அரசியலுக்காக மட்டுமே” எனக் கூறினார்.