Homeசெய்திகள்தமிழ்நாடுநாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் - அமைச்சர் உதயநிதி பேச்சு

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் – அமைச்சர் உதயநிதி பேச்சு

-

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களில் 42 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குறு-சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூபாய் 154 கோடி செலவில் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் திறந்து வைக்கப்பட்டன. விழாவில் இளைஞர் நலன் திறன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தொழில் முனைவோர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது குறு சிறு நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1970 ஆம் ஆண்டு நூற்றாண்டு நாயகன் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்ட சிட்கோ நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். பெரிய தொழிலுக்கு எந்த அளவிற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதேபோல் சிறிய தொழில்களுக்கும் இந்த அரசுஅதிக அளவில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக தான் தொழில் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என உதயநிதி கூறினார். அதேபோல் தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் என அனைவரும் போற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய 42 சதவீத பெண்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என கூறிய உதயநிதி, தொழில் துறைகளை வளர்த்தெடுப்பதற்காக
டாட்கோ மற்றும் சிட்கோ நிறுவனங்களை 54 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதலமைச்சராய் இருந்த கலைஞர் கொண்டு வந்துள்ளார் என குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த துறை சார்பாக மட்டும் 63 ஆயிரத்து 570 கோடிக்கு மேல் நிறுவனங்கள் கவனம் ஈர்க்கப்பட்டு 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு வேலை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக பேசிய அமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

udhayanidhi stalin tn assembly

தமிழ்நாடு சிட்கோ கிண்டி தொழில் பேட்டையில் 94.67 கோடியில் புதிய கட்டிடமும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 63.95 லட்சம் கோடியில் புதிய அடுக்குமாடி தொழில் வளாகமும் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு சிட்கோவின் புதிய முயற்சியாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் வகையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். அதேபோல் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு, அதனை அடைய அனைவரும் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

MUST READ